பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் அறிமுகமாக வாய்ப்புள்ள 4 இளம் இந்திய வீரர்கள்

0
265
Sarfaraz Khan and KS Bharat

2022 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணி நவம்பர் மாதம் பங்களாதேஷ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான ஒரு பகுதிதான். ஆனாலும் இந்திய அணி நிர்வாகம் சில புதிய முயற்சிகளைப் செய்து பார்க்க அதிக வாய்ப்புள்ளது!

ஏனென்றால் வெஸ்ட் இன்டீஸ், இலங்கை தொடர்களுக்கு அடுத்து ஐ.பி.எல் தொடர், அடுத்தடுத்து தென் ஆப்பிரிங்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இன்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடர் என இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரர்கள் ஓய்வின்றி விளையாட இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குச் சிறிது ஓய்வு கட்டாயம் தேவைப்படும். எனவே இந்தக் காலக்கட்டத்தில் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்கள் சிலரை இந்திய அணி நிர்வாகம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அப்படி அறிமுகமாக வாய்ப்புள்ள நான்கு வீரர்கள் யாரென்றுதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்!

சர்ப்ராஸ் கான்

இந்த 24 வயதான மும்பை மாநில அணிக்காக விளையாடும் இளைஞர், கடந்த இரண்டு ரஞ்சி சீசன்களாக அசுர பார்மில் இருக்கிறார். முச்சதம், இரட்டை சதம், சதங்களென எட்டு சதங்களை நொறுக்கித் தள்ளியிருக்கிறார். இந்த ஆண்டு ரஞ்சி சீசனின் தொடர் நாயகன் இவர்தான். இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் மிடில் வரிசைக்கு நிச்சயம் இவர் பெயரை மட்டும்தான் இந்திய அணி தேர்வாளர்கள் நினைக்க முடியும்!

சூர்யகுமார் யாதவ்

மும்பை மாநில அணிக்காகவும், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும் விளையாடும் 31 வயதான சூர்யகுமார் யாதவ் காயத்தால் தேவையான அளவு ஓய்வு எடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்திற்கு டெஸ்ட் தொடரில் விளையாட சென்றபோது இவர் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். இந்திய அணி நிர்வாகத்தின் டெஸ்ட் அணிக்கான திட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இருப்பதால், நவம்பர் மாதம் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் அறிமுகமாகலாம்!

கே.எஸ்.பரத்

ஆந்திர மாநிலத்திற்காக விளையாடும் 28 வயதான இந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன், தற்போது இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் நல்ல பேட்டிங் பார்மில் இருக்கும் இவர், அதைத் தற்போது இங்கிலாந்து கவுன்டி அணி லீசெஸ்டர்சையருடனான பயிற்சி போட்டியிலும் நிரூபித்தார். இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டிற்குமான நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்து ஓய்வின்றி விளையாடும் ரிஷாப் பண்ட்டிற்கு ஓய்வளித்து இவருக்கு வாய்ப்பு தரப்படலாம்!

சபாஸ் அகமத்

27 வயதான இந்த பெங்கால் வீரர், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் என்பதோடு பேட்டிங்கில் நல்ல பங்களிப்பைத் தரக்கூடியவர். ரவீந்திர ஜடேஜாவின் காயங்களை மனதில் வைத்து, அக்சர் படேலோடு இவரை மாற்று வீரராக இந்திய அணி நிர்வாகம் கொண்டு வரலாம். இந்த ஆண்டு ரஞ்சி சீசனில் பேட்டிங் பவுலிங்கில் பெங்கால் அணிக்கான இவரது பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது!