கேப்டன் பொறுப்பில் இருக்கும் போதே ஓய்வை அறிவித்த 4 பிரபல கிரிக்கெட் வீரர்கள்

0
229
MS Dhoni and Eoin Morgan

தான் விளையாடும் சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் அமர்வது எல்லா வீரர்களுக்கும் இருக்கும் ஓர் கனவு. கேப்டன் என்றாலே பொறுப்பு தான். டாஸ் போடுவதில் இருந்து போட்டி முடிவு தெரிந்த பின் உரை கொடுப்பது வரை அனைத்திலும் கேப்டன் தான் முன்னிலையில் நின்று செயல்படுவார். ஒரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தி அதில் சாதனைகள் படைப்பது என்பது சாமான்யமான ஒன்று கிடையாது. ஒரு கேப்டன் என்பவர் அவரது ஆட்டத்தையும் சேர்த்து அணியையும் பார்த்துக்கொள்ள வேண்டும். பல கேப்டன்கள் இதைச் சமாளிக்க முடியாமல் பாதியிலேயே விலகியுள்ளனர்.

சிறந்த உதாரணம் நம்முடைய முன்னாள் சென்னை கேப்டன் ஜடேஜா. தோனிக்குப் பின் சென்னை அணியை வழிநடத்த ஓர் வீரர் தேவை என்பதால், தோனி இருக்கும் போதே அதை செய்து முடிக்க வேண்டும் என்றெண்ணி ஜடேஜாவை அணியின் தலைவராக அறிவித்தது சி.எஸ்.கே நிர்வாகம். அவருக்கு கீழ் ஆடிய சென்னை சூப்பர் அணி வரிசையாக தோல்விகளை மட்டுமே தழுவியது. மேலும் கேப்டன் சுமையை ஏற்றதில் இருந்து ஜடேஜாவால் தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த இயலவில்லை. இதனால் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனியிடம் கொடுத்துவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டார் ஜடேஜா.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்தோம் கவுத்தோம் என எதையும் செய்ய முடியாது. பொதுவாக கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறும் ஓர் வீரர் நிர்வாகத்திடம் அதைப் பற்றி விவரிப்பர்.அந்தக் குறிப்பிட்ட நிர்வாகமும் அந்தப் பதவியில் அமரும் அடுத்த வீரர் குறித்து ஓர் முடிவு செய்தப் பின்னரே நடப்புக் கேப்டனை வெளியேற்றும். கேப்டன் பொறுப்பில் இருக்கும் போதே ஒரு சில வீரர்கள் ஓய்வும் பெற்றுள்ளனர். அவர்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

இயான் மோர்கன் – இங்கிலாந்து

உலகக் கோப்பை வென்ற கேப்டனான இயான் மோர்கன் சமீபத்தில் நடந்து முடிந்த நெதர்லாந்து ஓடிஐ தொடருடன் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவரது இந்த திடீர் முடிவு கிரிக்கெட் உலகையே உலுக்கியது. இங்கிலாந்து லிமிடெட் ஓவர்ஸ் அணியைக் கையில் எடுத்து பலப்படுத்தி முதல் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் இவர். அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி அதிரடியாக கிரிக்கெட்டை ஆடத் தொடங்கியது. மோசமான ஃபார்ம் மற்றும் தொடர்ச்சியான காயங்களால் அவதிப்பட்டு வந்த இயான் மோர்கன் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் விலகுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார். அவருக்குப் பின் தற்போது ஜாஸ் பட்லர் கேப்டனாக பொற்றுபெற்றுள்ளார்.

எம்.எஸ்.தோனி – இந்தியா

2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20யில் பங்கேற்றது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-3 என மண்ணைக் கவ்வியது. இந்தியா அணியில் இங்கிலாந்தை சற்றும் அசைக்கவில்லை. இந்த மோசமான ஆட்டத்திற்குப் இந்தியாவின் பல இடங்களில் ரசிகர்கள் உருவ பொம்மையை கொளுத்தி தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இந்த டெஸ்ட் தொடரின் கேப்டனாக செயல்பட்ட தோனி, தன் பொறுப்பை விராட் கோலியிடம் கொடுத்துவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்தார். இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டனுக்கு நல்ல முடிவு அமையவில்லை என நினைக்கும் போது இன்றும் வேதனையாக உள்ளது.

- Advertisement -
கிரன் போல்லார்ட் – வெஸ்ட் இண்டீஸ்

கேப்டன் கிரன் போல்லார்ட் 2021 ஐசிசி டி20 உலக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்தினார். பல அதிரடி ஆட்டக்காரர்கள் கொண்டு மிகவும் பலமான அணியாகக் கருதப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய தவறியது. அவர்களால் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற இயலவில்லை. அணியின் தலைவர் போல்லார்ட் மிகவும் மோசமான நிலையில் தவித்தார். இந்த தொடரில் மட்டுமல்ல அடுத்து நடந்த ஐபிஎல் தொடரிலும் மிக மோசமான பேட்டிங்கை வெளிக்காட்டினார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக இருக்கும் போதே ஓய்வு பெற்று அனைவரையும் அதிர்ச்சியில் உறைத்தார். தற்போது நிக்கோலஸ் பூரன் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி செயல்படுகிறது.

பீட்டர் சீலர் – நெதர்லாந்து

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஓய்வு பெற்ற அதே தொடரில் தான் நெதர்லாந்து வீரர் பீட்டர் சீலரும் தன் ஓய்வை அறிவித்தார். சென்ற மாதம் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டியுடன் இவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். நெதர்லாந்து அணியின் சிறப்பான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த இவர் பல மாதங்களாக காயங்களுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாக ஓய்வு பெற்றுள்ளார் என்று செய்திகள் வந்தன. ஸ்காட் எட்வர்ட்ஸ் நடப்புக் கேப்டனாக பொறுப்பேற்று நெதர்லாந்து அணியை வழிநடத்தி வருகிறார்.