2022 டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற காயத்தால் வாய்ப்பு குறைந்த 4 வீரர்கள்

0
474

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் காயம் என்பதும் ஒரு பகுதி. கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் கபில் தேவ், ஆடம் கில்கிறிஸ்ட், எம்.எஸ்.தோனி, விராட் கோலி போன்ற சில வீரர்களே பெரிதாய் காயத்திற்குள் சிக்காதவர்கள். டேல் ஸ்டெயின் போன்ற சாம்பியன் பாஸ்ட் பவுலர் காயத்தாலே கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்றார். சில நேரங்களில் சில முக்கியத் தொடர்களில் காயங்களால் சில நட்சத்திர வீரர்கள் விளையாட முடியாமல் போய் அணிக்குப் பெரிய பின்னடைவாய் அமையும்.

வருகின்ற 2022 டி20 உலகக்கோப்பையில் காயத்தால் விளையாடுவதற்கான வாய்ப்பற்ற இந்திய வீரர்கள் சிலரையும், எளிதில் காயமடையும் ஆபத்திருக்கக் கூடிய இந்திய வீரர்கள் சிலரையுமே இந்தக் கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்!

- Advertisement -

1. டி. நடராஜன்

இந்திய அணிக்கு ஆறு பந்துகளையும் யார்க்கர்களா வீசும் திறமையோடு கிடைத்த லெப்ட் ஹேன்ட் பாஸ்ட் பவுலர். கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் முழங்கால் காயத்தால் வெளியேறிய இவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குத் திரும்பி வரும்போது, பந்தை ஸ்விங் செய்யும் திறமையோடும் வந்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் துரதிஷ்டவசமாக ஐபிஎல் தொடரில் மீண்டும் காயமடைந்து, தற்போது டிஎன்பிஎல் தொடரிலும் பங்கேற்க முடியாமல் இருக்கிறார்.

2. தீபக் சாஹர்

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக வெஸ்ட் இன்டீஸ் தொடரின் போது தொடை தசைப்பிடிப்பு மற்றும் காயத்தால் பாதிக்கப்பட்ட, இந்த ரைட்ஹேன்ட் ஸ்விங் பாஸ்ட் பவுலர், ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதற்குப் பிறகு செளத்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இன்டீஸ் என எந்தத் தொடர்களிலும் பங்கேற்கவில்லை. இவர் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகமே.

3. வருண் சக்ரவர்த்தி

2019ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக மிஷ்ட்ரி ஸ்பின்னர் என்று 8.4 கோடிக்கு வாங்கப்பட்டு ஆச்சரிய அலைகளை உருவாக்கியவர். அந்த அணியில் சிறப்பாய் அமையாது, அடுத்து மூன்றாண்டுகளாக கொல்கத்தா அணியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இதனால் 2021 டி20 உலகக்கோப்பை இந்திய அணியிலும், ப்ளேயிங் லெவனிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவரது முழங்கால் காயம், இவரை அதிகம் உழைக்க விடாமல், இவரது சிறப்பான செயல்பாட்டை தடுத்து, தற்போது ரெகுலர் இந்திய அணியிலிருந்தே வெளியேற்றிவிட்டது. காயத்தால் கேரியரை இழந்த வீரர்களில் இவரும் ஒருவர்.

4. கே.எல்.ராகுல்

இந்திய அணியில் திறமையின் அடிப்படையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பேட்ஸ்மேன். ஆனால் இவருக்குப் பெரிய பிரச்சினையாக காயங்கள் துரத்தியபடியே இருக்கிறது. தற்போது கடைசியாக துபாயில் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து அணிக்குத் திரும்பியவரை, கொரோனா தாக்கி இருப்பது சோகமான விசயம். எளிதில் காயமடையக் கூடிய வீரராக ராகுல் இருக்கிறார்.