இந்திய ரசிகர்களுக்கு சோகமான செய்தி; 3வது ஒருநாள் போட்டியில் இப்படி நடந்தாக வேண்டுமாம்!

0
1196

இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதியிலேயே நின்ற ஆட்டம் டக்-வொர்த் லூயிஸ் முறைப்படி யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.

நியூசிலாந்து மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதி வரும் மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களும் அடித்து நம்பிக்கை கொடுக்க, இந்தியா 47.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மில்னே மற்றும் டேரல் மிச்சல் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

220 என்ற சற்று எளிமையான இலக்கை துரத்தி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் பின் ஆலன், டெவான் கான்வெ இருவரும் அதிரடியாக ஆரம்பித்தனர்.

முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்தது. பின் ஆலன் 54 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அவுட்டாகினர். டெவான் கான்வெ 38*, கேப்டன் வில்லியம்சன் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

18 ஓவர்கள் முடிவில் 104/1 என நியூசிலாந்து அணி இருந்தபோது, வேகமாக மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே தடைபட்டது.

டக்-வொர்த் லூயிஸ் முறைப்படி…

இந்த டக்-வொர்த் லூயிஸ் முறைப்படி, நியூசிலாந்து அணி தற்போது வரை 50 ரன்களுக்கும் மேல் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்த டக்-வொர்த் லூயிஸ் முறையின்படி, இன்னிங்சில் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும்.

3வது ஒருநாள் ஆட்டத்தில் 18 ஓவர்கள் வீசப்பட்டபோதே மழையால் தடைபட்டது. ஆகையால் இந்த விதிமுறைகள் தற்போது எடுபடாது. ஒருவேளை பாதியிலேயே மழையை நின்று சில ஓவர்கள் வீசப்பட்ட பிறகு, போட்டியில் மீண்டும் மழை வந்தால் அப்போது டக்-வொர்த் லூயிஸ் முறை ஈடுபடும்.

2.45 மணிக்குள் ஆட்டம் துவங்கினால் மட்டுமே போட்டி தொடர்ந்து நடைபெறும். அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டி மீண்டும் துவங்கவில்லை என்றால், ஆட்டம் முடிவின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடும் என்ற தகவல்கள் வந்திருக்கிறது.