3வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் 2 பெரிய மாற்றங்கள்; மீண்டும் உள்ளே வருகிறார் நட்சத்திர வீரர் – இந்திய அணி பேட்டிங் தேர்வு!

0
61

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதவிருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் முறையே 10 விக்கெட்டுகள் மற்றும் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை தன் வசப்படுத்தியது. சம்பிரதாயத்திற்காக நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்திருக்கிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணி இரண்டு பெரிய மாற்றங்களுடன் களமிறங்குகிறது. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு பதிலாக தீபக் சஹார் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் உள்ளே எடுத்து வரப்பட்டிருக்கின்றனர். பேட்டிங் தேர்வு செய்த பிறகு கேப்டன் கே எல் ராகுல் பேட்டி அளிக்கையில், “எங்களை நாங்களே சேலஞ்ச் செய்ய தீர்மானித்துள்ளோம். குறைவான நேரம் மட்டுமே நான் விளையாடினேன். நீண்ட நேரம் விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். மிடில் ஆர்டரில் சிறிது நேரம் விளையாடுவதற்கு முடிவு செய்து, பேட்டிங் முடிவை எடுத்திருக்கிறேன். மைதானம் பந்து வீச்சிற்கு சாதகமாக உள்ளது. இருப்பினும் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். இன்று அவர்களுக்கு மிகப்பெரிய சேலஞ்ச் காத்திருக்கிறது. மேலும் இரண்டு முக்கிய மாற்றங்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறோம்.” என்று குறிப்பிட்டார்.

அதே இரண்டு முக்கிய மாற்றங்களுடன் ஜிம்பாப்வே அணியும் களமிறங்குகிறது. இது குறித்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கூறுகையில், “இன்று எங்களது பந்துவீச்சாளர்களுக்கு சேலஞ்ச் காத்திருக்கிறது. துவக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை இக்கட்டான சூழலில் நிறுத்துவதற்கு காத்திருக்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.

இந்திய அணியில் தவான், சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் மூவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா சற்று கைகொடுக்கிறார். தாக்கூர், தீபக்சாகர் இருவரும் பந்துவீச்சில் நல்ல பார்மில் இருக்கின்றனர். இளம் வீரர் ஆவேஷ் கான் உள்ளே வந்திருப்பது கூடுதல் பலமாக இருக்கும். சுழல் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் அசத்துகிறார். அவர் பேட்டிங்கிலும் சிறிது பங்களிப்பை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜிம்பாவே அணியை பொறுத்தவரை சரியான துவக்கம் கிடைக்காதது தற்போது வரை பின்னடைவாக இருக்கிறது. மிடில் ஆர்டரில் அனுபவ வீரர் சீன் வில்லியம்சன் சிறிது பக்கபலமாக இருந்தாலும், மற்றொரு அனுபவ வீரர் சிக்கந்தர் ராசா போதிய அளவில் ரன்கள் எடுக்காதது அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆரம்பத்தில் நிறைய விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் இந்திய அணியை திணறடிக்கலாம். 20 முதல் 25 ஓவர்களை இந்திய அணி தாக்குப் பிடித்துவிட்டால் நிச்சயம் அணியின் ஸ்கோர் 300 ரன்கள் கடக்கும் என்பது சந்தேகம் இல்லை.

இன்றைய போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் விபரங்கள்

இந்திய அணி

ஷிகர் தவான், கேஎல் ராகுல்(கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன்(கீப்பர்), அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான்

ஜிம்பாவே அணி

தகுத்ஸ்வானாஷே கைடானோ, இன்னசென்ட் கையா, டோனி முன்யோங்கா, ரெஜிஸ் சகப்வா(கேப்டன்/கீப்பர்), சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியாச்சி, ரிச்சர்ட் நகரவா