கேஎல் ராகுல் மீண்டும் சொதப்பல்.. டாப் 3 பேட்ஸ்மேன்கள் காலி… சிக்கலான நிலையில் இந்திய அணி!

0
422

இரண்டாவது நாள் உணவு இடைவேளைக்கு முன்பு, இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்திருக்கிறது விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் களத்தில் உள்ளனர்.

டாக்கா மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மோமினுல் ஹக் 84 ரன்கள் அடித்தார். உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா நான்கு விக்கெட்டுகளையும், உனட்கட் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து முதலாவது இன்னிசை விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 19 ரன்கள் அடித்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கே எல் ராகுல்(10) மற்றும் சுப்மன் கில்(20) இருவரும் அடுத்தடுத்து தஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

இன்றைய போட்டியில் 19 ரன்கள் அடித்திருந்த போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்கள் கடந்தார் புஜாரா. முதல் போட்டியில் 90 மற்றும் 104 ரன்கள் அடித்திருந்த அவர், இப்போட்டியில் வெறும் 24 ரன்களுக்கு தஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழந்தார்.

உணவு இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி 86 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் ஆட்டம் இழந்திருக்கின்றனர். ரிஷப் 12 ரன்கள், கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கின்றனர். வங்கதேச அணிக்கு தஜுல் இஸ்லாம் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -