4-0-10-4 ரேணுகா சிங் அசத்தல் பந்து வீச்சு; வீடியோ இணைப்பு உள்ளே – காமன்வெல்த் இந்தியா அரையிறுதிக்கு தகுதி!

0
373
Renuka singh

தற்போது இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள்!

காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்டும் உள்ளது. இதில் பெண்கள் அணியினர் மட்டுமே பங்கேற்று இருக்கிறார்கள். மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, பார்படோஸ், இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, செளத்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இருக்கின்றன!

- Advertisement -

இதில் ஒவ்வொரு குழுவிற்குள்ளும் ஒரு அணியோடு ஒரு அணி ஒருமுறை மோதும். இதிலிருந்து இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். பின்பு இறுதிபோட்டியும், அதில் வெற்றிபெறும் அணி கோப்பையையும் வெல்லும்.

இந்தத் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியோடு தோற்றும், பாகிஸ்தான் அணியோடு வென்றும் இருந்தது. இதைப்போலவே பார்படோஸ் அணியும் இருந்தது. இந்தியா-பார்படோஸ் அணிகள் மோதும் போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களே அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும் என்கிற வாழ்வா? சாவா? நிலை இருந்தது!

இந்த நிலையில் நேற்று இரு அணிகளும் இரவு மோதிக்கொண்டன. டாஸில் வென்ற பார்படோஸ் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 5 ரன் என ஏமாற்றினாலும், ஷெபாலி வர்மா 43 [26], ஜெமிமா ரோட்ரிக்ஸ் 56 [46], தீப்தி சர்மா 34 [28] என ரன்கள் சேர்க்க, இருபது ஓவர் முடிவில் இந்திய அணி 162 ரன் சேர்த்தது!

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய பார்படோஸ் அணியை இந்திய அணியின் மிதவேகப் பந்துவீச்சாளர் ரேணுகா சிங் பவர்-ப்ளேவிலேயே ஒட்டுமொத்தமாக சிதைத்து விட்டார். தனது நான்கு ஓவர் ஸ்பெல்லை தொடர்ச்சியாய் ரேணுகா சிங், தனது முதல் ஓவரில், இரண்டாவது ஓவரில் தலா ஒரு விக்கெட்டையும், மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கெட்டையும் அடிக்க, பார்படோஸ் அணி பவர்-ப்ளேவில், ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரிலேயே 4 விக்கெட்டுக்கு 19 ரன் என்று விழுந்துவிட்டது.

பின்பு ஆல்-அவுட் ஆகக்கூடாது என்ற நோக்கத்தில் விளையாடிய பார்படோஸ் அணி இருபது ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ரேணுகா சிங் ஆட்டநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் மூன்று ஆட்டங்களில் இவர் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!