கே.எல்.ராகுல் தீபக் சாஹர்; ஆசியக்கோப்பையில் நிலை என்ன? – லேட்டஸ்ட் தகவல்கள்

0
31
Kl rahul deepak chakar

இந்திய அணி தற்போது டாப் ஆர்டரில் கே.எல்.ராகுல் இல்லாது திணறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அவரது இடத்திற்கு ருதுராஜ், இஷான் கிஷான், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ் என நான்கு வீரர்களை பரிசோதித்துப் பார்த்தாகிவிட்டது!

இந்திய அணியைப் பொறுத்தவரை எடுத்துக்கொண்டால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இன்னிங்சை கட்டமைத்து ஆட்டத்தை முன்நகர்த்தி எடுத்துச் செல்லக்கூடிய அதிஉயர் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் கே.எல்.ராகுலும் ஒருவர். உலகில் எந்த நாட்டு மைதானத்திலும் சதத்தைக் கொண்டு வரக்கூடிய பேட்டிங் தொழிற்நுட்பம் அவரிடம் இருக்கிறது!

இப்படிப்பட்ட வீரருக்குக் காயம் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது. இவரது காலத்திலிருந்து இந்திய அணி விளையாடிய போட்டிகளில் இவர் 50% போட்டிகளில்தான் விளையாடி இருக்கிறார். அந்தளவிற்கு காயம் இவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. தற்போது வெஸ்ட்இன்டீஸ் தொடருக்கு இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பின் தயாராகி இருந்தாலும், கோவிட் வந்து பின்னடைவை உருவாக்கிவிட்டது. இந்தளவிற்கு அவரது நிலைமை சிக்கலாய் உள்ளது!

கே.எல்.ராகுலைப் போலவே புதுப்பந்து வேகப்பந்து வீச்சாளர், பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பைத் தரக்கூடிய தீபக் சாஹரையும் காயங்கள் துரத்துகிறது. இவரது காயம் இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணியை ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளியது. அந்தளவிற்கு இவரது வெற்றிடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாத வீரராக இருக்கிறார்!

தற்போது தீபக் சாஹர் ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கே.எல்.ராகுல் ஜிம்பாப்வே தொடருக்கும் தேர்வு செய்யப்படவில்லை. டி20 வடிவில் நடத்தப்படும் ஆசியக்கோப்பை, மற்றும் டி20 உலகக்கோப்பையில் அணியில் இவர்களின் நிலை என்னவென்று குழப்பமாகவே இருக்கிறது!

தற்போது இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து முக்கியத் தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் “கே.எல்.ராகுல் தன்னை நிரூபிக்க எதுவும் இல்லை. அவர் உலகத்தரமான வீரர். அவர் டி20 கிரிக்கெட் இந்திய அணியில் ஸ்பெசல் ஓபனர் ஆவார். நாங்கள் அவரையே தொடர்வோம். அவர் இல்லாததால் ரிஷாப், சூர்யாவை முயற்சித்தோம். இவர்கள் இருவருமே சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவர்கள் அங்கே தொடர்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தீபக் சாஹர் ஆசியக் கோப்பை அணியில் இருக்கவும் அதிகபட்ச வாய்ப்பிருப்பதாகவும், பிசிசிஐ வழக்கமான 15 பேர் கொண்ட அணியை அனுப்பாமல், கூடுதலாக 17 பேர் கொண்ட அணியை ஆசியக்கோப்பைக்கு அனுப்ப உள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன!