2 சூப்பர் ஓவர்.. கடைசிவரை போராடிய ஆப்கான்.. ரவி பிஸ்னாய் திடீர் ஹீரோ.. இந்தியா வெற்றி

0
874
Rohit

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மோதிக்கொண்டன.

இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று இந்த தொடரில் முதல் முறையாக பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மா, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங் மூவரும் வெளியில் வைக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் குல்தீப் யாதவ், ஆவேஸ் கான் மூவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் வர பவர் பிளேவில் ஆப்கானிஸ்தான் அணியின் கைகள் ஓங்கியது. இந்திய அணி 4.3 ஓவர்களில் 22 ரன்களுக்கு ஜெய்ஸ்வால் 1, விராட் கோலி 0, சிவம் துபே 1, சஞ்சு சாம்சன் 0 ஆகிய நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் கோல்டன் டக் ஆனார்கள்.

ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் மொத்த ஆட்டத்தையும் அப்படியே மாற்றினார்கள். ரோகித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி 69 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 121* ரன்கள் குவித்தார்.

ரோகித் சர்மா உடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரிங்கு சிங் 39 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 69* ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 100 பந்துகளில் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 20 அவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு இந்தியா 212 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் 3 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது. குர்பாஸ் 50(32), கேப்டன் இப்ராகிம் ஜட்ரன் 50(41) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். ஓமர்சாய் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

பின்பு ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி திடீரென 16 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை மாற்றினார். இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் இவரை 34 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து கரீம் ஜன்னத் சஞ்சு சாம்சனால் 2 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 36 ரன்கள் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை ஆவேஸ் கான் வீசினார். இந்த ஓவரில் நஜிபுல்லா ஜட்ரன் விக்கெட்டை வீழ்த்தி 17 ரன்கள் கொடுத்தார்.

கடைசி இருபதாவது ஓவரை முகேஷ் குமார் வீச வந்தார். இந்த ஓவரில் முதல் பந்து வைடாக அமைந்தது. அடுத்து 4,0,வைட்,2,6 வந்தது. இந்த இடத்தில் குல்பதின் நைப் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 2 பந்துகளுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் 5வது பந்தில் 2 ரன்கள் வந்தது. இதனால் கடைசிப் பந்தில்
3 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் கடைசிப் பந்தில் மீண்டும் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் ஆட்டம் டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் வேண்டிய ஆப்கா மற்றும்னிஸ்தான் அணிக்கு குல்பதின் நைப் மற்றும் குர்பாஸ் இருவரும் வந்தார்கள்.இந்திய தரப்பில் முகேஷ் குமார் சூப்பர் ஓவரை வீசினார்.

இந்த முறை முதல் பந்தை நேராக அடித்து விட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்ற குல்பதின் நைபை விராட் கோலி த்ரோவில் சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்தார். இதற்கு அடுத்து நபி வந்தார். குர்பாஸ் ஒரு பவுண்டரி, நபி ஒரு சிக்ஸர் அடிக்க, ஆப்கானிஸ்தான் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தது.

இந்தியாவிற்கு பேட்டிங்கில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் வந்தார்கள். முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிங்கிள் ரன்கள் கிடைக்க, மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் ரோகித் சர்மா இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

இதற்கு அடுத்து கடைசி இரண்டு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் ரோஹித் சர்மா ஒரு ரன் எடுக்க, கடைசிப் பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட ஜெய்ஸ்வால் பேட்டிங் முனையில் இருந்தார். கடைசிப் பந்தில் அவர் ஒரு ரன் எடுக்க ஆட்டம் மீண்டும் டை ஆனது.

இந்த முறை இந்தியா முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தானின் பரீத் அகமத் வீசினார். ரோகித் சர்மா இந்த முறையும் பேட்டிங்கை துவங்கினார். ஆனால் இந்த முறை ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ரிங்கு சிங் வந்தார்.

ரோகித் சர்மா முதல் மூன்று பந்துகளில் 6,4,1 என 11 ரன்கள் எடுத்தார். நான்காவது பந்தில் ரிங்கு ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் பந்தை தவறவிட, ரோகித் சர்மா ஒரு ரன்னுக்கு ஓடினார், ஆனால் குர்பாஸ் அவரை ரன் அவுட் செய்தார். இரண்டு விக்கெட் இழந்ததால் இந்திய அணியின் சூப்பர் ஓவர் 11 ரன்னுக்கு முடிவுக்கு வந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது நபி மற்றும் குர்பாஸ் இருவரும் பேட்டிங் வந்தார்கள். இந்திய அணிக்கு இந்த முறை சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் வீசினார். அவருடைய முதல் பந்தில் முகமது நபி கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்த பந்தில் கரீம் ஜன்னத் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை சந்தித்த குர்பாசும் நேராக தூக்கி அடிக்க கேட்ச்சாகி விக்கெட் கொடுத்தார். இறுதியாக இந்திய அணி ஒரு வழியாக வெற்றி பெற்றது.