150 ரன் இலக்கை13.1 ஓவரில் அடித்து ராஜஸ்தான் அசத்தல் வெற்றி; பிளே ஆப் வாய்ப்பிலிருந்து ஏறக்குறைய வெளியேறியது கொல்கத்தா!

0
507
Jaiswal

ஐபிஎல் 16வது சீசனில் இன்று கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார். இதற்கு முந்தைய ஆட்டங்களில் இரண்டாவது பந்து வீசுவதை தங்களின் திட்டமாக ராஜஸ்தான் ராயல்ஸ் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

கொல்கத்தா அணிக்கு களம் இறங்கிய ஜேசன் ராய் 10, குர்பாஸ் 18, வெங்கடேஷ் 57, நிதீஷ் ராணா 22, ரசல் 10, ரிங்கு சிங் 16, சர்துல் தாக்கூர் 1, சுனில் நரைன் 6, அனுகுல் ராய் 6* ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் கொல்கத்தா அணிக்கு எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் வந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய சாகல் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிதீஷ் ராணா வீசிய முதல் ஓவரில் 26 ரன்கள் விளாசி அற்புத துவக்கம் கொடுத்தார் ஜெய்ஸ்வால். அடுத்த ஓவரில் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் 13 பந்தில் அரை சதம் அடித்து ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடியில் ஈடுபட்டார்.

முடிவில் ஜெய்ஸ்வால் 47 பந்தில் 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 48 ரன்களும் எடுக்க 13 ஓவரில் இலக்கை எட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றின் வாய்ப்பில் தொடர்கிறது. அடுத்து பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுடன் வெற்றி பெற்றால் எந்தச் சிரமமும் இல்லாமல் பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் நுழையும். அதே சமயத்தில் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது என்றே கூறலாம்!