முதல் நாளில் 15 விக்கெட் ; தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா இடையே ஆரம்பித்தது டெஸ்ட் போர்!

0
1200
Aus vs Sa

தென் ஆபிரிக்க அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இன்று டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்து வருகிறது!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கக்கூடிய அணிகள் மோதுகின்ற டெஸ்ட் போட்டி என்பதால் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. இதில் ஆஸ்திரேலியா வென்றாலும் தென் ஆப்பிரிக்கா வென்றாலும் அது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாகத்தான் அமையும். ஆனால் ஏதாவது ஒரு அணி இன்னொரு அணியை இந்த தொடரில் முழுமையாக வெல்வது அவசியமாகும்!

இந்த டெஸ்ட் போட்டிக்கான தாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு தாக்குதலை தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை, தென் ஆப்பிரிக்கா அணியின் கைல் வெர்னனைன் 64 ரன்கள், தெம்பா பவுமா 38 ரன்கள் மட்டுமே எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களுக்கு மொத்த விக்கட்டையும் இழந்தது.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிச்சல் ஸ்டார்க், நாதன் லயன் தலா மூன்று விக்கட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலந்து இருவரும் தலா இரண்டு விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இதற்கடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கும் பேட்டிங்கில் கடுமையான சோதனை இருந்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் கவாஜா, அடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அபாரமாய் விளையாடிய லபுசேன் ஆகியோரது விக்கட்டுகள் 27 ரன்களுக்குள் விழுந்துவிட்டது. அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் கொஞ்சம் தாக்கு பிடித்து 38 ரன்கள் சேர்த்தார்.

எல்லோரும் இப்படி தடுமாறிக் கொண்டிருக்க ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் டிராவீஸ் ஹெட் மட்டும் தனியாக வேறொரு மாதிரி அனாயசமாக விளையாடினார். அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 77 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் நிற்கிறார். இன்றைய ஆட்ட நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா நோர்க்கியா தலா இரண்டு விக்கெட்டுகளும், யான்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளார்கள்!