106 மீட்டர் சிக்ஸ் பறக்கவிட்ட ஓடியன் ஸ்மித்; அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற 147 ரன்கள் இலக்கு!

0
983

106 மீட்டர் இமாலய சிக்சர் அடித்த ஓடியன் ஸ்மித், அயர்லாந்து அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது விண்டீஸ் அணி.

டி20 உலக கோப்பை தொடரின் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய வாழ்வா? சாவா? போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

- Advertisement -

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது. கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும் சார்லஸ் 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த பிராண்டன் கிங் சற்று நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு உதவினார். இவர் 48 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் இதில் அடங்கும்.

அடுத்ததாக வந்த கேப்டன் பூரான் 11 பந்துகளில் 13 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். கீழ் வரிசையில் வந்த ரோவ்மன் பவல் ஆறு ரன்களுக்கு வெளியேற இக்கட்டான சூழலுக்கு சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஓடியன் ஸ்மித் 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். அதேபோல் பிரண்டன் கிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

147 ரன்கள் அடித்தால் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற முனைப்பில் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு துவக்க ஜோடி அபாரமாக செயல்பட்டு வருகிறது. ஆறு ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது.

மூத்த வீரர் ஸ்டிர்லிங் 19 பந்துகளில் 32 ரன்களும், கேப்டன் பால்பிர்னே 17 பந்துகளில் 31 ரன்கள் அடித்து களத்தில் உள்ளனர். இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் திணறி வருகிறது. ஏற்கனவே உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படி தகுதி சுற்றில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கே திணறி வருவது கத்துக்குட்டி அணிகளின் பலத்தை காட்டுகிறது.

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஒடியன் ஸ்மித் 106 மீட்டர்கள் சிக்ஸர் அடித்தது பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இவர் 108 மீட்டர் சிக்சர் அடித்தது குறிப்பிடத்தக்கது.